ஜப்பானின் தீவிர வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் வீரர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று புதிய அறிக்கையொன்று கூறுகிறது.
நிலையான விளையாட்டுக்கான பிரிட்டிஷ் சங்கத்தினால் (British Association for Sustainable Sport) புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜப்பானில் வெப்பநிலை உயர்ந்து வருவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து முன்னணி விளையாட்டு வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கவலைகளை இந்த அறிக்கை விவரிக்கிறது.
அறிக்கையின்படி, டோக்கியோவில் சராசரி ஆண்டு வெப்பநிலை “1900 முதல் 2.86 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது, இது உலகின் சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.”
ஒலிம்பிக் எதிர்வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. ஜப்பான் வழக்கமாக அதன் மிக உயர்ந்த வருடாந்திர வெப்பநிலையை அனுபவிக்கும் காலம் இதுவாகும், இது வெப்பமயமாதல் காலநிலையில் இன்னும் அதிகமாக உயர்வடைவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் டிரையத்லான், மராத்தான், டென்னிஸ் மற்றும் படகுப்போட்டி போன்ற நிகழ்வுகள் வெப்பமான சூழ்நிலைகளால் எவ்வாறு மோசமாக பாதிக்கப்படலாம் என்பதையும் ஆய்வு விவரிக்கிறது.
இதேவேளை வெப்பத்தில் போட்டியிடுவதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த விளையாட்டு வீரர்களுக்கு இது ஆலோசனைகளையும் அறிக்கை வழங்குகிறது.
அத்துடன் காலநிலை நெருக்கடி எதிர்காலத்தில் விளையாட்டு நிகழ்வுகளை எவ்வாறு பாதிப்படையச் செய்யும் என்பது குறித்தும் அறிக்கை எச்சரிக்கிறது.
தற்போதைய கொவிட் நிலைமைகள் டோக்கியோ விளையாட்டுக்கள் தொடர்பில் ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் வெளியாகியுள்ள இப் புதிய அறிக்கையானது மேலும் கவலைகளை அதிகரித்துள்ளது.