கம்போடியாவின் பெனொம் பென், மொரோடொக் டெக்கோ தேசிய விளையாட்டுத் தொகுதி அரங்கில் இன்று (10) ஆரம்பமாகவுள்ள ஆசிய மற்றும் கடல்சூழ் பிராந்தியத்துக்கான 4ஆவது குழுவுக்குரிய டேவிஸ் கிண்ணப் போட்டியில் இலங்கை பங்குபற்றவுள்ளது.
மூன்றாவது குழுவுக்கு தரம் உயரும் குறிக்கோளுடன் பங்குபற்றவுள்ளதாக அணித் தலைவரும் 22வருட அனுபசாலியும் சிரேஷ்ட வீரருமான ஹர்ஷன கோடமான்ன தெரிவித்தார்.
இலங்கை டென்னிஸ் அணியில் இடம்பெறும் வீரர்களில் ஹர்ஷன கொடமான்ன மாத்திரமே சிரேஷ்ட வீரராவார்.
ஏனையவர்களில் தெஹான் சஞ்சய விஜேமான்ன 2021இலிருந்து இலங்கை டென்னிஸ் அணியில் இடம்பெற்று வருகிறார்.
அப்ன பெரேரா, அஷேன் சில்வா ஆகிய இருவரும் கடந்த வருடம் முதல் தடவையாக டேவிஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்றியதுடன் கனிக்க ஜயதிலக்க அறிமுக வீரராக இந்த வருட அணியில் இடம்பெறுகிறார்.
இப் போட்டியில் கம்போடியா, ஈராக், குவைத், கிர்கிஸ்தான், மியன்மார், கத்தார், இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 8 அணிகள் பங்குபற்றவுள்ளன.
இந்த இரண்டு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா 6 போட்டிகள் நடத்தப்படும். இதற்கான குலுக்கலும் இன்று காலை நடத்தப்பட்டு போட்டி அட்டவணை தயாரிக்கப்படும்.
ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடுவதுடன் குழு நிலைப் போட்டிகள் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தரமுயர்வுக்கான நொக் அவுட் சுற்றில் மோதும்.
கடைசி இடங்களைப் பெறும் அணிகள் தரமிறக்கத்துக்கான சுற்றில் விளையாடும்.