இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டின் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸிடம் கடைசிப் பந்தில் தோல்வி அடைந்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ், தனது இரண்டாவது போட்டியில் யூபி வொரியர்ஸ் அணியை 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது.
மாரிஸ்ஆன் கெப், ராதா யாதவ் ஆகியோரின் மிகத் துல்லியமான பந்துவீச்சுகள், அணித் தலைவி மெக் லெனிங், ஷஃபாலி வர்மா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை இலகுவாக வெற்றி பெறச் செய்தன.
பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யூபி வொரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஷ்வீட்டா சேராவத் மாத்திரமே திறமையை வெளிப்படுத்தி 45 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் நான்கு வீராங்கனைகள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்களால் 20 ஓட்டங்களை எட்ட முடியாமல் போனது.
பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்கள் பந்துவீசி 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ராதா யாதவ் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 14.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
மெக் லெனிங் 43 பந்துகளில் 6 பவுண்டறிகளுடன் 53 ஓட்டங்களையும் ஷஃபாலி வர்மா 43 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் விளாசினர்.
அவர்கள் இருவரும் 76 பந்துகளில் 119 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.