புரோ கபடி லீக் 5-வது சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அறிமுக அணியான குஜராத் பார்ச்சூன் ஜெயின் அணி 26-20 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தின் முதல் 10 நிமிடத்தில் குஜராத் அணி 5 புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தது. அதேவேளையில் டெல்லி 2 புள்ளிகள் பின் தங்கி இருந்தது. டெல்லி வீரர் ரூபேஷ் 6 ரெய்டுகளை வீணாக்கினார். முதல் பாதி ஆட்டம் முடிவடைய 40 விநாடிகள் எஞ்சிய நிலையில் டெல்லி அணி ஆல் அவுட் ஆனது. சுகேஷ் ஹெட்ஜ் தலைமையிலான குஜராத் அணி முதல் பாதியில் 15-5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.
2-வது பாதியின் தொடக்கத்திலும் குஜராத் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் டெல்லி அணி 2-வது முறையாக ஆல் அவுட் ஆனது. 30-வது நிமிட முடிவில் குஜராத் 25-9 என வலுவான முன்னிலையை பெற்றது. இந்த நிலையில் டெல்லி வீரர் ஆனந்த், ரெய்டு மூலம் 2 புள்ளிகளை பெற்றார். அடுத்தடுத்து டெல்லி அணி புள்ளிகளை சேர்க்க 38-வது நிமிடத்தில் குஜராத் அணி ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து டெல்லி அணியினர் திறமையாக விளையாடியதால் 20-26 என நெருங்கினர்.
கடைசி 39 விநாடிகள் இருக்கும் போது குஜராத் அணி டைம் அவுட் கோரினர். நேரத்தை கடத்துவதற்காக அவர்கள் இந்த வியூகத்தை அமைத்தனர். கடைசி ரெய்டில் சுகேஷ் வேண்டும் என்றே நேரத்தை கடத்த குஜராத் அணி மேற்கொண்டு புள்ளிகளை இழக்காமல் வெற்றிக்கனியை பறித்தது. அந்த அணி தரப்பில் பாசல் 4 புள்ளிகளும், சச்சின், சுகேஷ், ராகேஷ் நார்வால் ஆகியோர் தலா 3 புள்ளிகளும் சேர்த்தனர்.