கொவிட் வைரஸ் பரவல் நிலைமைகள் இப்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட மீண்டும் வைரஸ் தொற்றுகள் உருவாக அதிக வாய்புகள் உள்ளன. தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய வைரஸ் தொற்றுகள் உருவாகலாம்.
எனவே இறுக்கமான சுகாதார வழிமுறைகளுடன் நாடு திறக்கப்பட வேண்டும் எனவும், பொதுமக்கள் சகலரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் சுகாதார, வைத்திய தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
டெல்வா வைரஸ் பரவலின் எச்சரிக்கை நிலையில் இருந்து நாடு முழுமையாக விடுபடவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியிலும் நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளையுடன் தளர்த்தப்படுகின்ற நிலையில் அது குறித்து வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினர்.
இது குறித்து இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவிக்கையில்,
நீண்ட நாட்களாக நாடு தனிமைப்படுத்தல் ஊரடங்கின் கீழ் இருந்த போதிலும் கட்டுப்பாடுகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை, அக்தியாவசிய சேவைகள் என்ற பெயரில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டமை மற்றும் பொது ஒன்றுகூடல், நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டமை என்பன சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளன என்றே கூற வேண்டும்.
எவ்வேறு இருப்பினும் நாட்டில் அச்சுறுத்தல் நிலையொன்று காணப்படுகின்ற நேரத்தில் தான் நாடு திறக்கப்படுகின்றது என்பதை சகலரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
மீண்டும் வைரஸ் பரவும் அச்சுறுத்தல் நிலைமை சகலருக்கும் உள்ளது. தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என்பதற்காக சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்பட கூடாது, இப்போது நிலைமைகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட மீண்டும் வைரஸ் தொற்றுகள் உருவாக அதிக வாய்புகள் உள்ளன.
தடுப்பூசிக்கு கட்டுப்படாத வைரஸ் தொற்றுகள் உருவாகலாம். ஆகவே சகலரும் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி செயற்பட வேண்டும் என்றார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர இது குறித்து கூறுகையில்,
டெல்டா வைரஸ் பரவலே நாட்டில் காணப்படுகின்றது, ஆகவே டெல்டா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தியில் நாடு பாதுகாப்பாக இருக்கின்றது என ஒருபோதும் கூற முடியாது, அதேபோல் இவ்வாறான வைரஸ் பரவல்களை உடனடியாக அழித்துவிட முடியாது என்பதை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் அதன் தன்மைகளில் அதே வடிவில் இப்போது பரவவில்லை.
ஆகவே இனியும் வெவ்வேறு வடிவங்களில் வேறு தன்மைகளில் வீரியத்தை அதிகரித்துக்கொண்டு பரவலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. எனவே நாடு திறக்கப்படுகின்றது என்பதற்காக சகலரும் வழமை போன்று கொரோனாவுக்கு முன்னர் செயற்பட்ட விதத்தில் செயற்பட முடியாது.
இப்போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதென்றால் கடந்த ஒன்றரை மாதங்களாக கையாளப்பட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளே காரணமாகும். ஆகவே இனியும் சுகாதார வழிமுறைகளை மேலும் அதிகமாக கையாள வேண்டியது நாட்டில் வாழும் சகல மக்களினதும் கடமையாகும்.
இது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் ஏனைய சகலரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். தடுப்பூசிகள் ஏற்றிக்கொள்வது தமது உயிர் பாதுகாப்பிற்கு இப்போது இருக்கும் ஒரே தெரிவாகும், ஆனால் தடுப்பூசியை ஏற்றிவிட்டோம் என்ற எண்ணத்தில் முகக்கவசம் இல்லாது, சுகாதார வழிமுறைகள் இல்லாது செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]