நாட்டின் சில வைத்தியசாலைகளில் தொற்றாளர்கள் அதிகரிப்பினால் காணப்படும் நெறிசல் தொடர்பில் வெளியாகியுள்ள சில புகைப்படங்கள் அல்லது காணொளிகள் போலியானவை அல்ல. நாளாந்தம் சுமார் 2,000 தொற்றாளர்கள், 100 அண்மித்தளவிலான மரணங்கள் பதிவாகின்றன. இது, கடந்த ஒன்றரை ஆண்டுடன் ஒப்பிடும் போது மிகவும் அபாயமுடையதாகும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
டெல்டா வைரஸ் தொற்றின் வேகம் நூறு வீதமானது. இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு எந்தவொரு தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். 18 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு இம்மாதத்திற்குள் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன வலியுறுத்தினார்.
இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் , அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது நாட்டில் நாளாந்தம் 2000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு , நூறை அண்மித்தளவில் மரணங்கள் பதிவாகின்றன. சுமார் 30,000 தொற்றாளர்கள் சிச்சைப் பெற்று வருகின்ற இந்த நிலைமை கடந்த ஒன்றரை ஆண்டுடன் ஒப்பிடும் போது மிகவும் அபாயமுடையதாகும். ஆரம்பத்தில் இனங்காணப்பட்ட கொவிட்-19 வைரஸ் அல்லது அல்பா வைரஸ் 50 வீத வேகத்தில் பரவக் கூடியது. ஆனால் தற்போது இனங்காணப்பட்டுள்ள டெல்டா வைரஸ் நூறு வீதம் வேகமாக பரவக் கூடியது.
வைரஸ் தொற்றினால் ஏற்படக் கூடிய பாரதூரமான நிலைமையைத் தடுப்பதற்கு எந்தவொரு தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மரணங்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். மேல் மாகாணத்தில் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று தினங்களுக்குள் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்படும். 1906 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தமது விபரங்களை வழங்கி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்று இரு வாரங்களின் பின்னரே முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்று இரு வாரங்களின் பின்னரே முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். எனவே தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் நடமாடுவது பாதுகாப்பானதல்ல. வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் போது உடலில் வைரஸ் மேலும் வளர்ச்சியடையாமல் தடுப்பதே தடுப்பூசியின் செயற்பாடாகும்.
கொவிட்-19 வைரஸ் மாதத்திற்கு இரு தடவைகள் அதன் புரோட்டினை மாற்றியமைக்கும். இதன் போதே டெல்டா, அல்பா, பீட்டா, கமா போன்ற திரிபடைந்த வைரஸ்கள் தோற்றம் பெற்றன. தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது டெல்டாவைப் போன்ற பிரிதொரு திரிபு உருவானால் அது பாரதூரமான அபாயம் மிக்கதாக்க காணப்படும் என்பதோடு, வைரஸ் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளையும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க நேரிடும்.
மூன்றாம் கட்ட தடுப்பூசி
உலக சனத்தொகையில் 40 சதவீதமானோருக்கு இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கும் , இரண்டாம் கட்டமாகவும் 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை 2022 ஜூன் மாதத்தில் நிறைவு செய்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கலை அடுத்த ஆண்டு ஜூனில் நிறைவடையச் செய்ய எதிர்பார்த்துள்ளதால் தற்போது மூன்றாம் கட்ட தடுப்பூசி குறித்த உலக சுகாதார ஸ்தாபனம் எவ்வித கருத்தினையும் வெளியிடவில்லை.
எவ்வாறிருப்பினும் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்ற போதிலும் , தொற்றுக்கு உள்ளாகும் நபர்களைக் கொண்டு அவ்வாறானவர்களுக்கு மூன்றாம் கட்டதாக தடுப்பூசியொன்று ஒதுக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன. இலங்கையில் அவ்வாறான செயற்பாடுகள் எவையும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
18 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி
18 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு இம்மாதத்தின் இடைப்பகுதியில் அல்லது மாத இறுதிக்குள் முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்த வயதுக்கு இடைப்பட்டோர் சுமார் 2.7 – 3 மில்லியன் மாத்திரமே உள்ளனர். எனவே செப்டெம்பர் மாதத்தின் இடைப்பகுதிக்குள் அவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசியை வழங்கும் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
இலங்கையில் தொற்றுறுதி செய்யப்படும் மொத்த தொற்றாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்த வயதெல்லைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். எனினும் இவர்கள் உயிரிழக்கும் வீதம் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நிலைமையை தொடர்ந்தும் பேணும்ட வகையில் அவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளும் துரிதமாக முன்னெடுக்கப்படும். எவ்வாறிருப்பினும் ஆடை தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் 18 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news