இந்தியாவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் 130க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
‘உலகில் 132 நாடுகளில் ஆல்ஃபா வகை கொரோனாவும், 81 நாடுகளில் பீட்டா வகை கொரோனாவும், 135 நாடுகளில் வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, உறுதிப்படுத்தப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஜூலை 26ஆம் திகதி முதல் ஒகஸ்ட் முதல் திகதி வரையான காலகட்டத்தில் நான்கு மில்லியன் மக்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மத்திய தரை நாடுகள், மேற்கு பசிபிக் பிராந்திய நாடுகளில் தொற்று எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதால், சர்வதேச அளவிலான கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனிடையே தெற்காசிய நாடுகளுக்கு கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை இம்மாத இறுதியில் தொடங்கக்கூடும் என அவதானிக்கப்பட்டிருப்பதால், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு அனுஷா
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news