கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 25 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்கள். இதனால், கோவை மக்கள் பீதியில் உள்ளனர்.
கோவையில் டெங்குகாய்ச்சல் தீவிரமாகப் பரவிவருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 35 பேர் இறந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கையை ஆதாரபூர்வமாக வெளியிட அரசு மறுக்கிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருபவர்களில், 25 பேருக்கு டெங்குகாய்ச்சல் அறிகுறி இருப்பதாக உறுதியாகியிருக்கிறது.
”கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 187 பேர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதற்காகவே, பிரத்யேகமாக 50 படுக்கைகள்கொண்ட அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் பரிசோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், மேலும் டெங்கு காய்ச்சலுக்கு என சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தொற்றுநோய் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் டெங்குவைக் கட்டுக்குள் கொண்டுவர தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. என்ன காய்ச்சல் என்று தெரியாமலேயே சிகிச்சையளிக்கும் போலி மருத்துவர்களாலும், மருத்துவர்கள் ஆலோசனையின்றி சுயமாக சிகிச்சை மேற்கொள்வதாலும்தான் மரணங்கள் ஏற்படுகின்றன. போலி மருத்துவர்களைக் கட்டுப்படுத்த முழுவீச்சில் செயல்பட்டுவருகிறோம் என்றார்.