அமெரிக்கவாவின் டெக்சாஸ் மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லோன் ஸ்டார் கொன்ஃபரென்சஸ் வெளியரங்க தட – கள சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் இலங்கையின் உஷான் திவன்க தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அமெரிக்காவில் தங்கியிருந்து உயர்கல்வி கற்றுவரும் உஷான் திவன்க, உயரம் பாய்தலில் 2.20 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார்.
நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரான திவன்க, உயரம் பாய்தலில் கடந்த வருடம் 2.30 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் தேசிய சாதனைக்கு உரித்தானார்.
இவர் நேற்று நடைபெற்ற போட்டியில் தனது 4ஆவது கட்டத்தில் முதல் முயற்சியிலேயே 2.20 மீற்றர் உயரத்தைத் தாவி வெற்றிபெற்றார்.
முதலாவதாக 2.05 மீற்றர் உயரத்தைத் தாவிய திவன்க, 2.08 மீற்றர் உயரத்துக்கு விடுகை கொடுத்து 2.11 மீற்றரை ஒரே முயற்சியில் தாவினார்.
தொடர்ந்து 2.14 மீற்றர் உயரத்துக்கு விடுகை கொடுத்த திவன்க, 2.17 மீறறர் உயரத்தையும் ஒரே முயற்சியில் தாவினார்.
இதனை அடுத்து 2.20 மீற்றர் உயரத்தைத் தாவிய திவன்க தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
அப் போட்டியில் அமெரிக்கர்களான ஜஸ்டின் லூயிஸ் 2.11 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் டக்காரி ஹில் (2.08 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.