இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவைப் பரிசீலிக்கும் டி.ஆர்.எஸ். முறையைப் பயன்படுத்த பெவிலியனில் இருந்த வீரர்களின் உதவியை இலங்கை வீரர் தில்ருவன் பெரேரா கேட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்துவரும் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று, இலங்கை அணி முந்தைய நாள் ஸ்கோரான 4 விக்கெட் இழப்புக்கு 165 என்பதுடன் ஆட்டத்தைத் தொடங்கியது. போட்டியின் 57ஆவது ஓவரை முகமது ஷமி வீசினார். அந்த ஓவரில், தில்ருவன் பெரேரா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக கள நடுவர் நைஜல் லாங் அறிவித்தார். இதையடுத்து பெவிலியனை நோக்கி நடக்கத் தொடங்கிய பெரேரா திடீரென திரும்பி, நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையைப் பயன்படுத்த விரும்புவதாக சைகை செய்தார். டி.ஆர்.எஸ். முறையில் பந்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் செல்வது தெரியவே, கள நடுவரின் முடிவு திரும்பப் பெறப்பட்டது.
பெவிலியனுக்குத் திரும்பிய பெரேரா, அங்கிருந்த வீரர்களின் அறிவுறுத்தலின்படியே டி.ஆர்.எஸ். முறையைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்தின்போது வர்ணணையாளராக இர்ந்த நியூசிலாந்தின் சைமன் டல், ‘பெரேரா களத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்று கூறினார். அவுட் கண்டத்தில் இருந்து தப்பிப் பிழைத்த பெரேரா, ஷமியின் பந்துவீச்சிலேயே விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டி.ஆர்.எஸ். முறையைப் பயன்படுத்த மைதானத்துக்கு வெளியில் இருந்த வீரர்களின் உதவியை நாடியதாகச் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.