டிஸ்னி லேண்டில் 2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்: பொலிசார் தீவிர தேடல்
மூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோக்க சென்ற தம்பதிகளின் 2 வயது குழந்தையை திடீரென முதலை நீருக்குள் இழுத்துச் சென்றது, இதை அறிந்த ஃபுளோரிடா பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
டிஸ்னிக்கு சொந்தமானது ஆர்லாண்டோவில் உள்ள கிராண்ட் ஃபுளோரிடியன் ரிசார்ட் மற்றும் ஸ்பா. இது டிஸ்னி மேஜிக் ராஜ்யத்துக்கு அருகில் உள்ளது.
இங்கு ஏராளமான பார்வையாளர்கள் குடும்பத்துடன் உற்சாகத்துக்காக வருவது வழக்கம். நெப்ராஸ்கா மாநிலத்தில் இருந்து மூன்று குழந்தைகளுடன் குடும்பமாக ஒரு தம்பதியினர் மன அமைதிக்காக நேற்று(செவ்வாய்க்கிழமை) வந்திருந்தனர்.
அமெரிக்க நேரப்படி இரவு 9 மணியளவில், அங்குள்ள செவன் சீஸ் லகூன் கடற்கரை அருகில் அவர்களுடைய 2 வயது சிறுவன் தன்னிச்சையாக அங்கு விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, திடீரென ஒரு முதலை கரைக்கு வந்து சிறுவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.
இதை சற்று தாமதமாகவே சுற்றி இருந்தவர்கள் அறிந்துள்ளனர். சிறுவனின் தந்தை உடனே நீருக்குள் பாய்ந்து தேடினார். எவ்வளவு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
விவரம் பரவிய உடனே ஐம்பது பொலிஸ் மற்றும் வன விலங்கு நிபுணர்கள் தீவிரமாக தேடுகின்றனர் ஆனால், குழந்தையை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், முதலை இழுத்துச் சென்ற சிறுவனை இனியும் மீட்க நினைப்பது வீண் முயற்சிதான் என அங்குள்ள அதிகாரிகளில் ஒருவரான ஷெரீஃப் ஜெர்ரி டெமிங்ஸ் கூறுகிறார்.
பலியான சிறுவனின் தாய், தந்தையர் கண்ணீருடன் கதறி அழுதது அங்கு எல்லோருடைய மனதையும் கரைத்தது.
டிஸ்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சோகமான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அதே சமயம், டிஸ்னி நிறுவனத்தின் புகழை சீரழிக்க கூடியது என்றார்.
மன அமைதிக்காக, சுகமான இடங்களுக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் அங்குள்ள ஆபத்துகளையும் அதற்குரிய பாதுகாப்புகளையும் அறிந்திருப்பது அவசியம்.
அதுவும் விழிப்புணர்வு இல்லாத குழந்தைகளை எச்சரிக்கையாக வைத்துக்கொள்வது மிக அவசியம். அது தவறினால், கொஞ்சநேர சந்தோஷத்திற்காக வந்துவிட்டு, வாழ்க்கை முழுதும் அழவேண்டிய துன்பத்தை இதுபோல வாங்கிச் செல்ல நேரும்.