தலாக் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும்’ என, மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், இன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின், பார்லிமென்டில் அவர் நிகழ்த்தும் முதல் உரை இது.வரும், 2018 – 19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, பிப்., 1ல் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரை சிறப்பாக நடத்துவதற்காக, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு, நேற்று ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, கூட்டத் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தரும்படி, எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார். அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அனந்த குமார் கூறியதாவது:முத்தலாக் தடுப்பு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் விவாதத்துக்கு வருகின்றன.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதாவுக்கு அளித்தது போல, தலாக் தடுப்பு மசோதாவுக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம்.லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள தலாக் தடுப்பு மசோதாவை, ராஜ்யசபாவிலும் நிறைவேற்றுவதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று நடக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டுக் கூட்டமும் இன்று நடக்க உள்ளது.