தயாரிப்பு : பிடிஜி யுனிவர்சல் & ஞானமுத்து பட்டறை & வைட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள் : அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன் , அர்ச்சனா ரவிச்சந்திரன், சர்ஜனோ காலித் மற்றும் பலர்.
இயக்கம்: அஜய் ஞானமுத்து
மதிப்பீடு: 3 / 5
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான ‘டிமான்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஹாரர் திரில்லர் திரைப்படம்- அந்த பிரிவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
‘டிமான்டி காலனி’ படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் கதையின் நாயகனான சீனிவாசன் ( அருள்நிதி) இறந்து விடுவது போல் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் இரண்டாம் பாகத்தில் தொடக்கத்திலேயே ஸ்ரீனிவாசன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக காண்பித்திருக்கிறார்கள். இதனுடன் அவரை யார் காப்பாற்றினார்கள்? எதற்கு காப்பாற்றினார்கள்? என்ற வினாவும் எழும். இதனுடன் டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தில் சங்கிலி ஒன்றும் இடம் பெற்றிருக்கும். அது என்ன ஆனது? என்ற கேள்வியும் எழும். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இரண்டாம் பாகத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.
சுந்தர் சி – ராகவா லோரன்ஸ் போன்ற பேய் கதையை கொமர்ஷலாக இயக்கும் இயக்குநர்கள் போல் இல்லாமல் அஜய் ஞானமுத்து கொஞ்சம் மெனக்கட்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அதிலும் குறிப்பாக கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் சாத்தானை வழிபடுபவர்கள் அமானுஷ்யங்களும், மர்மங்களும் மறைந்திருக்கும் புத்தகம் என சில விடயங்களை இணைத்து ரசிகர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை வழங்கி இருக்கிறார்.
ஸ்ரீனிவாசனுக்கு ரகு( அருள் நிதி) எனும் ஒரு சகோதரர் இருப்பது போன்று கதையை நீட்டித்து கதையின் நாயகனுக்கு ஓரளவு முக்கியத்துவம் தருகிறார் இயக்குநர். டெபி ( ப்ரியா பவானி சங்கர்) யின் காதல் கணவரான ஷாம் ( சர்ஜினோ காலித்) புற்றுநோயிலிருந்து சிகிச்சை பெற்று குணமான பிறகும், தற்கொலை செய்து கொள்கிறார். ஷாமை அளவு கடந்து நேசிக்கும் டெபி- ஷாம் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பதை அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டுகிறார். இதற்காக தாவோஷி ( செரிங் டோர்ஜி) எனும் சீன துறவியின் உதவியை நாடுகிறார்.
ரகு – டெபி – தா வோ ஷி ஆகிய மூவரும் சீன உணவகம் ஒன்றில் சந்திக்கும்போது, அவர்களை அமானுஷ்ய சக்தி ஆக்கிரமிக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
இதில் டெபியாக நடித்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தானும் ஒரு திறமையான நடிகை என்பதை இதில் நிரூபித்திருக்கிறார். ரகு – ஸ்ரீ னிவாசன் என இரு வேறு கதாபாத்திரங்களில் அருள்நிதி திரையில் தோன்றி, ‘நான் சுயநலவாதி தான். ஆனால் கெட்டவன் இல்லை’ என்று கூறி ரசிகர்களிடத்தில் அனுதாபத்தை அள்ளி, ரசிக்க வைக்கிறார். சில இடங்களில் பஞ்ச் வசனம் பேசி, சிரிக்கவும் வைக்கிறார். நடிகர் முத்துக்குமாரின் குணச்சித்திர நடிப்பு கவனம் ஈர்க்கிறது. சீன துறவியாக நடித்திருக்கும் நடிகர் செரிங் டோர்ஜி- சாமுவேலின் தந்தையாக நடித்திருக்கும் அருண்பாண்டியன் ஆகியோர் திரையில் தோன்றி இயக்குநரின் கனவை தங்களால் முடிந்த அளவுக்கு நனவாக்கி இருக்கிறார்கள்.
இரண்டாம் பாதியை விட முதல் பாதியில் ரசனைக்குரிய விடயங்கள் அதிகம். அதிலும் குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் பாணியிலான காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் + கலை இயக்குநர் + பின்னணி இசை அமைப்பாளர் + படத்தொகுப்பாளர் + என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குநருடன் கரம் கோர்த்து ரசிகர்களுக்கு ஹாரர் திரில்லிங் அனுபவங்களை வழங்குகிறார்கள். இதனை டிமான்டி காலனியின் முதல் பாகத்துடன் ஒப்பிடக்கூடாது.
பட்ஜட் அதிகம் என்றாலும் வி எஃப் எக்ஸ் காட்சிகளில் துல்லியமான நேர்த்தி மிஸ்ஸிங். இருப்பினும் வெகுஜன ரசிகன் இந்த டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை ரசிக்கவே செய்கிறான்.
டிமான்டி காலனி 2 – தோல்வி அடையாத இரண்டாம் பாகம்.