டிப்பர், மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நேற்று இரவு பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டி துர்க்கை அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்றது. அச்சுவேலியைச் சேர்ந்த தபேந்திரன் சுவேந்திரன் (வயது –34), பரராச சிங்கம் (வயது–45) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். அவருடைய சடலம் அச்சுவேலி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் பின் இருக்கையில் அமர்ந்து வந்தவர் படுகாயமடைந்த நிலையில் கோப்பாய் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் நடத்தினர்.
உயிரிழந்த பராசசிங்கத்தின் மனைவி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அச்சுவேலி வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்த நோயாளர் காவு வண்டியைப் பின் தொடர்ந்து சென்ற போது யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த மண் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த மோதுண்டுள்ளது.
சம்பவ இடத்தில் மனைவியைப் பார்க்க சென்ற கணவனான பராசசிங்கம் டிப்பர் சில்லினுள் தலை நசியுண்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.