அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில், உடலில் டாட்டூ குத்திய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் அவர்களது உடலில் டாட்டூ குத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பாப் இசை பாடகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலர் அவர்களது உடலில் டாட்டூ குத்திக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி சாதாரண இளைஞர்களையும் சமீப காலமாக டாட்டூ மோகம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெயர் வெளியிடப்படாத இளைஞர் ஒருவர் அவரது காலில் “இயேசுவே எனது வாழ்க்கை” என சிலுவை அடையாளத்துடன் கூடிய டாட்டூவை பச்சை குத்தியுள்ளார்.
பின்னர் மெக்சிகோ கடலில் நீச்சல் அடிக்க சென்றுள்ளார். இதனால் பச்சை குத்தப்பட்ட பகுதியில் அவருக்கு வலி ஏற்படுள்ளது, மேலும் அந்த பகுதியில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், பாக்டீரியாவின் தாக்குதல் அதிகமானதால் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துள்ளார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, டாட்டூ குத்திய இளைஞர், அதனை சரியாக பராமரிக்காமல் பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறினர்.
மேலும் அவர் ஒரு நாளைக்கு 6 பீர் பாட்டீல்கள் வரை மது அருந்தும் பழக்கம் கொண்டவராகவும் இருந்துள்ளார். இவையனைத்தும் சேர்ந்தே அவரது உயிரை பறித்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
மேலும் குளிக்கும்போது டாட்டூவில் தண்ணீர் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் புதிதாக டாட்டூ குத்தியவர்கள் நீச்சல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.