ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். நீண்ட நாட்களாக குடல் இறக்கத்தினால் அவதிப்பட்டுவந்த அவர் இன்று காலமானார். எழுத்திலும் களத்திலும் இயங்கிவந்தவர் அவர். பத்திரிகையாளர் என்று பரவலாக குறிப்பிடப்படும் அவர் இலக்கியம், நாடகம், ஓவியம் ஆகியவற்றிலும் தன் இளமைக்காலம் முதலாகவே இடைவிடாது செயலாற்றிக்கொண்டிருப்பவர்.
பால்யத்திலயே அரசியல், சமூக செயல்பாடுகளில் வெளிப்படையான கருத்துகளுடன் களச்செயல்பாட்டாளராக வெளிப்பட்டவர். செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்தார். பள்ளிக்கூடத்தில் படித்த போதே ஆசிரியர் வேணுகோபாலின் தூண்டலினால் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றையும் தயாரித்து வந்தார். அதிலிருந்தே அவர் பத்திரிகையாளராக செயல்படத் தொடங்கிவிட்டார். இவரது தந்தை வேம்புசாமியும் கூட ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றியவர்.
அப்போதே பேச்சு, எழுத்து, நாடகம் ஆகியவற்றில் பங்கெடுத்துக்கொண்டவர். பின் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்த அவர் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தார். 1971ஆம் ஆண்டு, காமராஜர்-ராஜாஜி-சோ ஆகியோரின் கூட்டணியை எதிர்த்தும், இந்திரா காந்தி – கருணாநிதி கூட்டணியை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட்டார் ஞாநி. இதில் தோல்வியைச் சந்தித்த அவர் பின்னாளில் ஆம் ஆத்மிக்கு உடல் நலம் சரியில்லை என்று விமர்சித்து கட்சியிலிருந்தும் விலகினார்.