தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், ஸ்டோக்ஸ் அரை சதம் கடந்தனர்.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில், இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று மான்செஸ்டரில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் காயத்தால் அவதிப்படும் பிலாண்டர், கிறிஸ் மோரிசுக்குப்பதில் புருய்ன், ஆலிவர் வாய்ப்பு பெற்றனர்.
ஸ்டோக்ஸ் அரை சதம்:
இங்கிலாந்து அணிக்கு ஜென்னிங்ஸ் (17), வெஸ்ட்லே (29) ஏமாற்றினர். மகாராஜ் ‘சுழலில்’ அலெஸ்டர் குக் (46) சிக்கினார். மார்னே மார்கல் பந்தில் டேவிட் (18) ஆட்டமிழந்தார். பின், இணைந்த கேப்டன் ஜோ ரூட், ஸ்டோக்ஸ் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. ரூட் (52) அரை சதம் கடந்தார். தன் பங்கிற்கு ஸ்டோக்சும் (58) அரை சதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் (33), ஜோன்ஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.