அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங்கிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்வது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலிக்கும் என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடனின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் நேற்று இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொலைபேசி உரையாடலாகவோ அல்லது மற்றுமொரு சர்வதேச உச்சிமாநாட்டிற்கு, பக்க அமர்வாக இடம்பெறும் சந்திப்பாகவோ இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் அவர்கள் இருவரும் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு இது பொருத்தமான இடமாக இருந்தாலும், அது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவுகின்ற நிலையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.