அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, ஐ.நா.சபையின் முன்னாள் தூதுவர் ஜோன் போல்ட்டனை ( John Bolton) , ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
இந்நிலையில், புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கான கடமையை எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி போல்ட்டன் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள டுவீட்டர் செய்தியில், ‘அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இதுவரைகாலமும் கடமையாற்றியவந்த எச்.ஆர்.மெக்மாஸ்டருக்கு (H.R. McMaster) நன்றி தெரிவிப்பதுடன், எப்போதும் அவர் எனது நண்பராக இருப்பார்’ எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற 14 மாதங்களில் மூன்றாவது தடவையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகரை மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
69 வயதான போல்ட்டன், முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ், ஜோர்ஜ் டபிள்யூ.புஷ், ரொனால்ட் றேகன் ஆகியோரின் நிர்வாகத்தில் கடமையாற்றியதுடன், பல ஆண்டுகளாக குடியரசு வட்டாரங்களில் வெளிவிவகாரக் கொள்கையாளராகவும் இருந்துள்ளார். அத்துடன், ஐ.நா.சபைக்கான அமெரிக்காவின் தூதுவராக முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷினால் நியமிக்கப்பட்ட போல்ட்டன், கடந்த 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதல் 2006ஆம் ஆண்டு டிசெம்பர்வரையான காலப்பகுதியில் அப்பதவியை வகித்திருந்தார்.
இவ்வாறிருக்க, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸனை அண்மையில் பதவியிலிருந்து ஜனாதிபதி ட்ரம்ப் நீக்கியதுடன், புதிய ராஜாங்கச் செயலாளராக மத்திய புலனாய்வு முகவரகத்தின் பணிப்பாளராக இருந்த மைக் பொம்பேயோ (Mike Pompeo) நியமித்திருந்தார். இதனையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கான மாற்றத்தை ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார்.