ஜேர்மனியில் வணிக வளாகத்தில் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 10 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
ஜேர்மனியில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜேர்மனியின் மூனிச் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொலிஸ் தரப்பிலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் வணிக வளாகத்திலும் அருகாமையில் உள்ள தெருவிலும் நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் இதுவரை பொலிசாரிடம் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு கருதி Moosach மாகாணத்தை முழுவதுமாக பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டு வந்துள்ளனர்.
கடந்த திங்களன்று ஓடும் ரயிலில் அகதி ஒருவர் கோடாரியால் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறக் கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.