ஜேர்மனியில் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி தக்குதல்: மீண்டும் தீவிரவாதிகள் கைவரிசை?
ஜேர்மனியில் Frankfurt அருகே மர்ம நபர் ஒருவர் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Heidelberg நகரில் central square அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பரபரப்பான அந்த பகுதியில் கார் ஒன்றில் வந்த மர்ம நபர் திடீரென்று பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பொதுமக்களில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் கூச்சலிட்டு உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அந்த நபர் காரில் இருந்து ஒரு கத்தியுடன் அப்பகுதியை விட்டு மாயமானதாக கூறப்படுகிறது.
இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவ குழுவினருடன் விரைந்து வந்த பொலிசார் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய நபரை பிடிக்கும் பொருட்டு பொலிஸ் குழு ஒன்றும் விரைந்தது.
பொதுமக்களின் உதவியுடன் குறித்த நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பொலிசார் காயம் காரணமாக அவரை உடனடியாக மருத்துவமனைக்கு இட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த கொலை முயற்சி தொடர்பில் உண்மையான நோக்கம் என்ன என்பது இதுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை. ஆனாலும் தீவிரவாத அச்சுறுத்தலை புறந்தள்ள முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலைநகர் பெர்லினில் மர்ம நபர் ஒருவர் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் லொறியை விட்டு தாக்குதல் நடத்தியதில் 12 பேர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.