ஜெ., ஜெ., வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், ‘சீல்’ வைத்திருந்த, இரண்டு அறைகளில், தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை, போயஸ் கார்டன் பகுதியில், ஜெ., வசித்த வேதா இல்லம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, அந்த இடத்தை கையகப்படுத்தும் பணியை, அரசு துவக்கி உள்ளது. கடந்த மாதம், சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில், பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, போயஸ் கார்டன் வீட்டில், ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தியபோது, இரண்டு அறைகளை பூட்டி, ‘சீல்’ வைத்தனர்.
அந்த அறை தவிர, மற்ற பகுதிகள் அனைத்தையும், அதிகாரிகள் சோதனை செய்து, அவற்றின் நீளம், அகலம் போன்றவற்றை மதிப்பீடு செய்தனர். மீண்டும், நேற்று கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள், போயஸ் கார்டன் இல்லத்தில் ஆய்வு செய்தனர்.
இது குறித்து, கலெக்டர் அன்புச்செல்வன் கூறியதாவது: ஜெ., வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், இரண்டு அறைகளை பூட்டி, சீல் வைத்திருந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில், அந்த அறைகள் திறக்கப்பட்டு, ஆய்வுப் பணி முடிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ், போயஸ் கார்டன் நிலம் மற்றும் கட்டடம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்கின்றன. அந்தப் பணிகள் முடிக்கப்பட்டதும், முழுமையாக அரசு கட்டுப்பாட்டில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.