திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் டாக்டர் சரவணன், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது அவர் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஏ.கே.போசை அ.தி.மு.க. வேட்பாளராக அங்கீகரித்தும், அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்ட படிவங்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரேகையை பதிவு செய்யும்போது அவர் சுயநினைவுடன் இருந்தாரா என்று சந்தேகம் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது, மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பதிவு தொடர்பாக சான்றளித்த அரசு டாக்டர் பாலாஜி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் செயலாளர் வில்ப்ரட் உள்பட பலர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வக்கீல்களும் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து நீதிபதி, ‘முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை தான் சர்ச்சையாக உள்ளது. எனவே ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது அவரிடம் பெறப்பட்ட கைவிரல் ரேகைகள் உள்ளிட்ட அனைத்து அசல் ஆவணங்களையும் சிறை சூப்பிரண்டு, டிசம்பர் 8-ந் தேதி நேரில் ஆஜராகி தாக்கல் செய்யவேண்டும். அதுபோல ஜெயலலிதா பெயரில் ஏதாவது ஆதார் அட்டை பெறப்பட்டு இருந்தால், அதுதொடர்பாக பெறப்பட்ட கைவிரல் ரேகை உள்ளிட்ட ஆவணங்களை ‘ஆதார்’ ஆணையத்தின் தலைவர் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றும், விசாரணையை டிசம்பர் 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்றும் உத்தரவிட்டார்.