ஜெயலலிதாவுக்கு கிலி கிளப்பும் அந்த 12 பேர்! கருணாநிதி கணிப்பு
சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப் போன்ற நிலை அவர்களுக்கு” என்று திமுக தலைவர் கருணாநிதி ‘கிலி’யை கிளப்பியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 98 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 89 இடங்களை கைப்பற்றியது.
அண்மையில் திருப்பரங்குன்றம் அதிமுக எல்எல்ஏ சீனிவேல் மரணம் அடைந்தார். இதனால் அதிமுக எம்எல்ஏ பலம் 133 ஆக குறைந்தது.
இந்த நிலையில், தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அதிமுகவில் அதிகம் என்றும், எனவே அவர்களை எங்கும் அலைபாய விடாமல் பிடித்து வைத்திருக்க வேண்டிய சவால் அக்கட்சிக்கு உண்டு என்றும், சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப் போன்ற நிலை அவர்களுக்கு என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஆளும் கட்சி மீண்டும் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை சந்தித்து வந்த திமுக எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் யாவை? அவற்றை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.தி.மு.க.வைப் பொறுத்தவரை எந்தச் சவாலையும் சாமர்த்தியமாக எதிர்கொள்ளும்;
இப்போது தி.மு.க.வை விட சவால்களைச் சந்திக்க வேண்டியவர்கள் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினர் தான்.
ஆளுங்கட்சி 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மை என்ற போதிலும், அங்கே வெற்றி பெற்ற அ.தி.மு.க உறுப்பினர்கள் 131 பேர் தான்.
அதிலும் ஒருவர் இறந்தது போக மீதி 130 பேர் தான். அதாவது தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அங்கே அதிகம்.
எனவே அவர்களை எங்கும் அலைபாய விடாமல் பிடித்து வைத்திருக்க வேண்டிய சவால் அ.தி.மு.க.வுக்குத் தான் உண்டு. சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப் போன்ற நிலை அவர்களுக்கு!
எங்களைப் பொறுத்தவரையில் 2011ம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு வெறும் 23 இடங்களில் தான் தி.மு.க வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத நிலையிலே இருந்தோம்.
தற்போது தி.மு.க மட்டும் 89 உறுப்பினர்களைக் கொண்டு பேரவையிலே இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி, கழக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளை ஆளுங்கட்சி எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்!
தமிழக சட்டப் பேரவையின் வரலாற்றில், தி.மு.க 1971-ல் 184 உறுப்பினர்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது;
இப்போது 89 உறுப்பினர்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்திருக்கிறது.
ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் தி.மு.க ஏற்படுத்தியிருக்கும் சரித்திரச் சான்றுகளை யாராலும் மறைத்து விட முடியாது!” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில், தி.மு.க. 89 இடங்களிலும், அ.தி.மு.க. 83 இடங்களிலும் தான் வெற்றி பெற்றுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.