அராலித்துறையில் லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உள்ளிட்ட உயர்மட்ட படை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மீள் விசாரணை நடத்தப்பட்டு, அதன் கண்டறிவுகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டியில் நடந்த லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் 25 ஆவது ஆண்டு நினைவு நாள் மற்றும் 75 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே, மல்வத்த பீடத்தின் வண. விஜிதசிறி அனுநாயக்க தேரர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அராலித்துறையில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சென்ற வாகனம் குண்டுவெடிப்பில் சிக்கியமை தொடர்பாக மர்மங்கள் நிலவுகின்றன. கம்பீரமான போர் வீரராக உயர் மதிப்புடன் திகழ்ந்த லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகள் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகங்கள் உள்ளன.
1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 08ஆம் நாள் தீவகத்தில் உள்ள அராலித்துறையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி வட மாகாண இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விஜய விமலரட்ண, வடமாகாண கடற்படைத் தளபதி கொமடோர் ஜெயமகா உள்ளிட்ட 09 சிறிலங்கா இராணுவ மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் உயிரிழந்தனர். யாழ்ப்பாண நகரத்தைக் கைப்பற்றும் ஒப்பரேசன் பைனல் கவுன்ட் டவுண் என்ற தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான இறுதிக் கட்டத் திட்டமிடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பேதே இவர்கள் கண்ணிவெடியில் சிக்கிய மரணமாகினர். இதனால் இந்த தாக்குதல் கைவிடப்பட்டது. கொப்பேகடுவவின் மரணம் தொடர்பான விசாரணைக்கு ஒரு அழுத்தம் தேவைப்படுகிறது. விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரனின் முடிவு அறிந்து கொள்ளும் வரை அவர் வாழ முடியாமல் போனது, பரிதாபம்.” என்றும் அவர் தெரிவித்தார்.