பொருளாதார மீட்சி மற்றும் சுபீட்சம் எனும் நிலைமாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் ஆதரவளிக்கவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கைத்தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதத்தினால் கடந்த செவ்வாய்கிழமை ப்ருசேல்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் ‘இலங்கையின் நண்பர்கள்’ குழுவின் தலைவர் தோமஸ் டெகோவ்ஸ்கி மற்றும் பிரதித்தலைவர் மெக்ஸிமிலியன் ரா ஆகியோர் உள்ளடங்கலாக அக்குழுவில் அங்கம்வகிக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உள்ளக மற்றும் வெளியகக் கடன்மறுசீரமைப்பு, சுற்றுலாத்துறை மேம்பாடு, ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் உள்ளடங்கலாக நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் செயற்திட்ட உத்திகள் தொடர்பில் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
அதுமாத்திரமன்றி பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கை பாரிய சவாலுக்கு முகங்கொடுத்திருந்த காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கும் அவர் தனது நன்றியை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் மூலம் நாட்டின் சமூகக்கட்டமைப்பில் நலிவுற்ற நிலையிலிருந்த துறைகள் மேம்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பொருளாதார மீட்சி மற்றும் சுபீட்சம் எனும் நிலைமாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் ஆதரவளிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் கிரேஸ் ஆசிர்வாதம் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துரைத்தார்.
அதேவேளை நிலைபேறான சூழலியல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற சவால்களை உரியவாறு கையாள்வதற்கான நடவடிக்கைகள் என்பன தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட தோமஸ் டெகோவ்ஸ்கி, பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் வலுவான கொள்கை மறுசீரமைப்புக்களைப் பாராட்டினார். அதுமாத்திரமன்றி இலங்கைக்கு அவசியமான தருணங்களில் முழுமையான ஆதரவை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.