ஜிம்பாப்வே அணிக்கு ஏமாற்றம்: “திரில்” வெற்றியால் தொடரை கைப்பற்றியது இந்தியா
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா 3 ஓட்டங்களால் “திரில்” வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது.
இதில் ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில் டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே கிண்ணத்தை தட்டிச் செல்லும் என்பதால், இரண்டு அணிகளும் கடுமையாகப் போராடின.
நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 22 ஓட்டங்களும், ராயுடு 20 ஓட்டங்களும் எடுத்தனர்.கெடார் ஜாதவ் (58) அரைசதம் விளாசி அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
அணித்தலைவர் டோனி (9) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் அக்சர் படேல் 20 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.
ஜிம்பாப்பே தரப்பில் டொனால்ட் திரிபனோ 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடியது.
தொடக்கத்திலே சிபாபா 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த மசகாட்சா (15), சிபாண்டா (28) நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். பீட்டர் மோர் அதிரடியாக ஆடி 26 ஓட்டங்கள் சேர்த்தார்.
வெற்றியை நோக்கி பயணித்த ஜிம்பாப்வே அணிக்கு நடுவரிசை சொதப்ப நெருக்கடி ஏற்பட்டது. வால்வர் (10), சிகும்புரா (16) நிலைக்கவில்லை. மருமா கடைசி நேரத்தில் அதிரடி காட்ட ஜிம்பாப்வே வெற்றிக்கு அருகில் வந்தது.
கடைசி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அதிரடி காட்டிய மருமாவால் (23) 17 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.