காலி – கிங்தொட்ட பகுதியில் ஏற்பட்டிருந்த குழப்பநிலையை அடுத்து, அந்த பகுதிக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் வைத்து இதுதொடர்பில் கேள்வி எழுப்பினார்.
காவற்துறை மா அதிபர் காலியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து உரையாற்றும் போது, காவற்துறையினர் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு யார் பொறுப்பேற்றது? என்று அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
காவற்துறையினர் இந்த விடயத்தில் தோல்வி அடைந்தமை குறித்து விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் சாகல ரத்நாயக்க, காவற்துறை மா அதிபரின் இந்த கருத்து தொடர்பில் தாம் சரியாக அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் காவற்துறை மா அதிபர் அவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தால், அதற்கு தாம் இணங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
சம்பவம் இடம்பெற்ற தினம் காவற்துறை அதிகாரிகள் தங்களின் கடமையை உரிய முறையில் நிறைவேற்றியதால்தான், அந்த நிலைமையை கட்டுப்படுத்த முடிந்தது.
காவற்துறையினர் மட்டுமின்றி, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முப்படையினரும் பிரவேசித்திருந்தனர்.
அவர்கள் பொறுப்புடன் செயற்பட்டதான் காரணமாகவே, அந்த நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.