‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற, லண்டன் மேயர் சாதிக் கானின் கருத்துக்கு, அந்நாட்டு அரசு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு, மன்னிப்பு கேட்க மறுத்துள்ள பிரிட்டன் அரசு, ‘அந்த சம்பவம், வெட்கப்படக் கூடிய செயல்’ என, கருத்து தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், 1919ல், பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில், ஜெனரல் டயரின் உத்தரவுப்படி, ஆயிரக் கணக்கான இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிர் தியாம் செய்தோரை நினைவுகூரும் வகையில், ஜாலியன் வாலாபாக்கில் நினைவிடம் உள்ளது.
இந்நிலையில், இந்தியா வந்த லண்டன் மேயர் சாதிக் கான், ‘ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு, பிரிட்டன் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, கருத்து தெரிவித்தார்.
அவரது இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், பிரிட்டன் அரசு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரிட்டன் பிரதமராக இருந்த, டேவிட் கேமரூன், 2013ல், இந்தியா சென்ற போது, ஜாலியன் வாலாபாக் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியது போல், இந்த படுகொலை, கண்டணத்திற்குரியது; வெட்கக்கேடானது. இது, குறித்து அப்போதே, பிரிட்டன் அரசு, தன் நிலையை தெரவித்துவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இச்சம்பவம் குறித்து, பிரிட்டன் அரசின் சார்பில், மன்னிப்பு ஏதும் கேட்கப்படவில்லை. மன்னிப்பு என்ற வார்த்தையும், அரசின் அறிக்கையில் இடம் பெறவில்லை.