காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி காணாமல் போய் 17 நாட்களுக்கு பின்னர் அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையைத் தொடர்ந்து அவர் இறந்துள்ளதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.
சவுதியின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு கொலை அல்ல என சவுதி நிறுவ முயற்சிப்பதாக பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சவுதி அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி அரச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
ஜமால் காசோஜி இறந்துள்ளதை முதல் முறையாக சவுதி அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பி.பி.சி. சர்வதேச செய்திச் சேவை அறிவித்துள்ளது.
அத்துடன், சவுதி புலனாய்வு அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக இளவரசர் முகம்மத் பின் சல்மான் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்றையும் சவுதி மன்னர் சல்மான் அமைத்துள்ளதாக சவுதி கூறியுள்ளது.
சவுதி முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஜமால், அக்டோபர் 02 ஆம் திகதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றிருந்தார். அதன்பின்னர் அவர் காணாமல் போயிருந்தார்.
இது இவ்வாறிருக்கையில், ஊடகவியலாளர் ஜமால், தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதற்கான காணொளி மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக துருக்கி கூறியிருந்தது.
இந்நிலையிலேயே, ஜமால் கசோஜி தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்துள்ளது. அச்சண்டையிலேயே அவர் மரணத்துள்ளதாக சவுதி இப்போது கூறி வருகின்றது.
துருக்கியில் இது தொடர்பில் நடைபெற்ற விசாரணையில் இதுவரை 18 சவுதி அரேபிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.