10-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது.
வங்கதேசத்தின் டாக்கா நகரில் நேற்று தொடங்கிய இந்தத் தொடரின் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதியது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் இந்தியா முதல் கோலை அடித்தது. ஆகாஷ்தீப் சிங்குடன் கூட்டணி அமைத்து இந்த கோலை எஸ்.வி.சுனில் அடித்தார். ஆனால் அடுத்த நிமிடத்திலேயே ஜப்பான் பதிலடி கொடுத்தது. கென்ஜி கிடாசோடோ அடித்த பீல்டு கோலால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.
இதன் பின்னர் இந்திய அணி தாக்குதல் ஆட்டம் தொடுத்தது. 21-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஹர்மான்பிரீத் அதை கோலாக மாற்றத் தவறினார். எனினும் அடுத்த நிமிடத்தில் லலித் உபாத்யாய் அருமையாக அடித்த பீல்டு கோலால் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. ஹர்மான்பிரீத்திடம் இருந்து பந்தை பெற்ற லலித் உபாத்யாய் அதனை அருமையாக கட்டுப்படுத்தி ரிவர்ஸ் ஷாட் மூலம் இந்த கோலை அடித்தார்.
3-வது கால் பகுதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் இந்திய அணி 3-வது கோலை அடித்தது. இந்த கோலை ராமன்தீப் சிங் அடித்தார். எஸ்.வி.சுனில் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பை ராமன்தீப் சிங் சரியாக பயன்படுத்திக் கொண்டார். 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான நிலைக்குச் சென்ற நிலையில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை மேலும் தொடர்ந்தது. 35 மற்றும் 48-வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர்களை ஹர்மான்பிரீத் சிங் கோல்களாக மாற்றினார்.
இதன் பின்னர் இந்தியாவுக்கு மேலும் இரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய வீரர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினர். அதேவேளையில் கடைசி நிமிடங்களில் ஜப்பான் அணிக்கு இரு முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய வீரர்கள் தங்களது தற்காப்பு ஆட்டத்தால் அதனை முறியடித்தனர். முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்துடன் நாளை மோதுகிறது.