ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலையையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜப்பான் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்க விரும்புவதாக ஜப்பானிய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பொலிஸ் மா அதிபர் இடாரு நகமுரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் எவ்வாறு பாதுகாக்கப்பட்டார் என்பதில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் அபே, நாரா நகரில் அரசியல் பிரச்சார நிகழ்வில் பேசும்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
41 வயதான துப்பாக்கிதாரி, அபேயின் பின்னால் நடந்து சென்று, அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டார்.
67 வயதான அவரது கழுத்தில் இரண்டு துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்து காயங்கள் மற்றும் அவரது இதயம் சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அபேயின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை உள்ளூர் பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.