ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (25) ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி கிரியைகளில் கலந்துக்கொள்ளும் வகையிலேயே இந்த விஜயம் அமைகின்றது.
இந்த விஜயத்தின் போது ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா மற்றும் நிதி அமைச்சர் ஷனுச்சி சுசுகி ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இதன் போது கடன் மறுசீரமைப்பு திட்டங்களுக்கான ஒத்துழைப்புகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தவும் இலங்கையில் கைவிடப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதே வேளை, ஜப்பானிலிருந்து பிலிப்பைன்ஸுக்கும் ஜனாதிபதி செல்ல உள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மெனிலாவின் நடைப்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துக்கொள்ளும் வகையிலேயே ஜனாதிபதி ரணில் அங்கு செல்கின்றார்.
இந்த மாநாட்டின் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி குழுமத்தின் தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பொது வெளியில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
அவரது இறுதி கிரியை அரச மரியாதையுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் கலந்துக்கொள்ளும் வகையில் பன்னாட்டு தலைவர்களும் வருகை தரவுள்ளனர்.