சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அமைச்சரின் சம்பளத்தை வழங்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மாத்திரம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வகட்சி ஆட்சி அமைத்த பின்னர் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ கார் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரணிலின் முக்கிய தீர்மானங்கள்

தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் ஒரு வருட காலத்திற்கு உறுப்பினர்களின் சம்பளத்திற்கு பணியாற்றுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர் பதவிகள் 30 வரை மட்டுப்படுத்தப்படும், மேலும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் 40 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பல உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதுடன், சிறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் நியமனங்களில் பதவி பெறும் அனைவரினதும் எரிபொருள் கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பணிக்கான உதவித்தொகையை மட்டும் வழங்கவும், மேலதிக கார்கள் வழங்குவதை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்களினால் பெருமளவான அரசாங்கப் பணம் விரயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பழைய வாகனங்கள் விற்பனை

இதேவேளை, முன்னாள் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கார்கள் இதுவரை அந்தந்த அமைச்சுக்களால் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு அமைச்சுகளிலும் குவிந்து கிடக்கும் பழைய வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களை ஏலம் விட்டு அந்தந்த அமைச்சுகளுக்கு பணம் பெற்றுக்கொடுக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பயன்படுத்திய வாகனங்களைக் கொண்ட அமைச்சு நிதியமைச்சாகும். மேலும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திலும் இவ்வாறான வாகனங்கள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.