ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி ஒன்று இடம்பெற்று , யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் துவிச்சக்கர வண்டிப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.


யாழ் மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு குறித்த பேரணி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சென்று , அங்கு கூடி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


(09) சனிக்கிழமை நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் அமைப்புகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.