உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கண்டி, யாழ்ப்பாணத்திற்கான விஜயங்களை மேற்கொண்டுள்ளதுடன் திருகோணமலை விஜயத்தை மேற்கொண்டு இந்திய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டுள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அரசியல், சிவில் பிரதிநிதிகளை சந்தித்தும் கலந்துரையாடியுள்ள அவர் இன்றைய தினம் ஜனாதிபதி, பிரதமர்,வெளிவிவகாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா நேற்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டினை மேற்கொண்டு ஆசிபெற்று தனது விஜயத்தினை ஆரம்பித்திருந்தார். இந்த நிகழ்வில் இந்திய தூதுவர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டிருந்தனர். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் கௌரவ தியவதன நிலமே அவர்களினால் வரவேற்கப்பட்டு ஆலய நிருவாகிகளுடனும் கலந்துரையாடியிருந்தார்.
தலதா மாளிகையில் ஊடகவியலாளர்களிடத்தில் கருத்து பகிர்ந்திருந்த அவர், “ இது எனது முதல் விஜயம், அதேபோல் எனது விஜயத்தில் முதலாவது இடமாக இங்கு வந்து இறை ஆசியை பெற்றுள்ளேன். இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால கலாசார பண்பாட்டு உறவுமுறை காணப்படுகின்றது. இங்கு வந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தனர்.
குருநாகல் விஜயம்
கண்டி விஜயத்தின் பின்னர் நண்பகல் குருநாகலுக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இலங்கை ஐ.ஒ.சி யின் அபிவிருத்தி வேலைத்திட்ட பகுதியொன்றுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
திருகோணமலை விஜயம்
அதன் பின்னர் திருகோணமலை எண்ணெய் குதங்களை பார்வையிட சென்றிருந்த அவர் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கிக்கொண்டுள்ள எண்ணெய் குதங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். திருகோணமலையின் உள்ள ஐ.ஒ.சியின் தலைமையகத்திற்கு சென்றிருந்த அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
யாழ் விஜயம்
திருகோணமலை விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று பிற்பகல் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார செயலாளர், வடக்கு ஆளுநர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துடையாடியிருந்தார்.
ஜனாதிபதி -பிரதமர் – வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசியல் கட்சிகளுடன் சந்திப்பு
இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்,பீரிசை வெளிவிவகார அமைச்சில் சந்திக்கவுள்ளதுடன் ஆளுந்தரப்பு அமைச்சர்கள் சிலருடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இன்று பிற்பகல் ஐந்து மணிக்கு சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இந்திய தூதுவர் இல்லத்தில் இடம்பெறும் இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களாக எம்.எ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும், நிகழ்கால அரசியல் செயற்பாடுகள், வடக்கு கிழக்கு விவகாரங்கள் குறித்து பேசவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.