ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் , மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஓராண்டாக்கு கடன் திட்டத்தின் எரிபொருளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
அத்தோடு நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் காரணமாகக் காண்பித்து தேசிய சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்க முடியாது.
அதானி நிறுவனத்திற்கு வேலைத்திட்டங்களை வழங்கி , இந்தியாவிடம் கையேந்துவது தவறான விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டின் நெருக்கடிகளைக் காண்பித்து தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய இடமளிக்க முடியாது. மின்சாரசபை பொறியியலாளர்களிள் மாபியாக்களுக்கு எதிர்க்கட்சி கீழ்படிந்துள்ளதாகக் கூறுகின்றனர். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு தேசிய சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு இடமளித்தால் எதிர்காலத்தில் சுனாமியின் போது ஏற்பட்ட அழிவை விட , பாரிய அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
பஷில் ராஜபக்ஷ தற்போது பதவியிலிருந்து விலகினாலும் , எதிர்காலத்தில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய இடம் நிச்சயம் வழங்கப்படும்.
சம்பிக ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்த போதிலும் , 43 ஆவது படையணியை உருவாக்கி சுயாதீனமாகவே செயற்பட்டு வந்தார். எனவே தற்போது அவர் அறிவித்துள்ள முடிவினால் எவ்வித பாதிப்பும் இல்லை.
நாட்டில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும் நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களின் மீது கண்ணீப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு மாத்திரம் அரசாங்கத்திடம் பணம் உள்ளதா? இவ்வாறு அடக்குமுறைகளின் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது.
இவ்வாறு செயற்பட்டமையினாலேயே மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைவரும் பதவி விலகி , தலைமறைவாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ நிபந்தனைகளை ஏற்று பதவி விலகினால் மாத்திரமே சர்வதேசம் எமக்கு உதவுவதற்கு முன்வரும்.
எனவே அவர் பதவி விலகினால் மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஓராண்டுக்கு கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
நாட்டில் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் ஏனைய அனைத்து பிரச்சினைகளும் சுமூகமாகிவிடும் என்றார்.