அரசியல்வாதிகளிலுள்ள ஊழல் மற்றும் திருட்டில் ஈடுபடுபவர்களை துப்பறவு செய்ததன் பின்னர்தான் பதவியை துறந்து வீடு செல்லவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த கதிரையிலிருந்து நான் எப்போது வீடு செல்லப் போகிறேன் என சிலர் என்னிடம் கேட்கின்றனர். நான் இந்தக் கதிரையில் தொடர்ந்தும் இருக்க வந்தவன் அல்லன். இருப்பினும், நான் வீடு செல்வதற்கு முன்னர், அரசியல்வாதிகளிடையே இருக்கும் திருடர்கள், ஊழலில் ஈடுபடுபவர்கள் ஆகியோரை இல்லாதொழிப்பேன். அதன்பின்னரே வீடு செல்வேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ருவரி 10 ஆம் திகதியின் பின்னர் ஊழல், மோசடிக்கு எதிராக நான் வீதியில் இறங்கப் போகிறேன். கட்சி, நிறம் பாராமல் இந்த நாட்டின் மீது பற்றுக் கொண்ட சகலரையும் இணைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிரான சக்தியொன்றை கட்டியெழுப்புவேன். இந்த சக்தியுடன் வந்து இணைந்து கொள்ளுமாறு நான் நாட்டை நேசிக்கும் சகலரையும் அழைக்கின்றேன் எனவும் ஜனாதிபதி மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.