பாராளுமன்றத்தின் ஊடான 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி தெரிவிக்கான வேட்புமனு தாக்கல் நாளை 19 ஆம் திகதி செவ்வாயக்கிழமை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் தாம் வேட்பாளர்களாகக் களமிறங்கவுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
ஆனால் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது ஆதரவு என்று, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இரண்டாவது தடவையாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் அது தொடர்பில் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. பொதுஜன பெரமுனவிற்குள் உள்ள ரணில் எதிர்ப்பு தரப்பினர் தமது ஆதரவு டலஸ் அழகப்பெருமவிற்கு என அறிவித்துள்ளனர்.
அரசியல் நுட்பவாதியான ரணில் வாக்கெடுப்பின் போது தன்னால் வெற்றி பெற முடியாமல் போகும் என்பதை முன்னரே ஊகித்து அறிந்து கொள்வாராயின் , அவர் வேட்பாளராகக் களமிறங்க மாட்டார். அவ்வாறு ரணில் போட்டியிலிருந்து ஒதுங்கும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் தற்போதுள்ள பெரும்பான்மை அடிப்படையில் , டலஸ் அழகப்பெரும வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
டலஸ் ஜனாதிபதியாகும் பட்சத்தில் , ரணில் அதன் மூலம் பிரதமராகும் வாய்ப்புக்களும் அதிகம். நிலைமை இவ்வாறு தான் அமையும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் செயற்பாட்டை தாமதிக்காமல் முன்னெடுப்பார்.
ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவை போன்று , தானும் ரணிலை பிரதமராக நியமித்தால் , மக்களின் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகக் கூடும் என்பதால் , டலஸின் தெரிவு சஜித் பிரேமதாசவாகவும் இருக்கலாம். இந்த கூட்டணியானது ஒப்பீட்டளவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் குறைக்கக் கூடியதாக அமையும் என்ற போதிலும் , பொருளாதார நெருக்கடிகளுக்கு எந்தளவிற்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் என்பது சந்தேகத்திற்குரியது.
ஜனாதிபதி தெரிவு அனைவர் மத்தியிலும் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கின்ற போதிலும் , ரணில் விக்கிரமசிங்கவின் மௌனமும் பொறுமையும் மறுபுறம் சிந்திக்க வைக்கிறது. காரணம் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதாக அறிவித்த அநுரகுமார , ‘ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்காக எதிர்கால அதிகார மோகமற்ற இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்களாயின் , அவர்களால் அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கும் , வேட்பாளராகக் களமிறங்கும் தீர்மானத்திலிருந்து விலகுவதற்கும் தயார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘எதிர் தரப்பினரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் கடினமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஊழல் மற்றும் சகாக்கள் அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்குவது , இனிமேலும் பிரயோசனமற்றதாகவே அமையும் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு முயற்சிக்கின்றோம்.’ என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தெரிவில் தனது வெற்றியென்பது மிகக் கடினமானது என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது நாளை 19 ஆம் திகதி இடம்பெறும் வேட்புமனு தாக்கலின் பின்னர் , 19 ஆம் திகதியே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவிடக் கூடும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர். எவ்வாறிருப்பினும் சுமார் 4 தசாப்தங்களின் பின்னர் தானாகக் கிடைத்துள்ள வாய்ப்பினை ரணில் விக்கிரமசிங்க தக்க வைத்துக் கொள்வாரே தவிர , தவற விட மாட்டார் என்பதே அனைவரதும் கணிப்பீடாகவுள்ளது.