அரச படைகளினதும் பொலிஸாரின் பாதுகாப்புடனும் மேற்கொள்ளப்படும் புத்தர் சிலை விவகாரம் மற்றும் அத்து மீறிய மேய்ச்சல் நில அபகரிப்பு போன்றவற்றை தடுத்து நிறுத்தாது கண்டும் காணாதவர் போல ஜனாதிபதி செயற்படுகிறார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (19.10.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ரணில் இரட்டை வேடம்
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர் விவகாரங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரட்டை வேடம் போடுகிறார்.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் உடனடியாக மேய்ச்சல் நில அபகரிப்பில் மேலதிக செயற்பாடுகளை நிறுத்துமாறு ஓடர் போட்டார்.
பின்னர் அரச படைகளினதும் பொலிஸாரின் பாதுகாப்புடனும் மேற் கொள்ளப்படும் புத்தர் சிலை விவகாரம் மற்றும் அத்து மீறிய மேய்ச்சல் நில அபகரிப்பு போன்றவற்றை தடுத்து நிறுத்தாது கண்டும் காணாதவர் போல ஜனாதிபதி செயற்படுகிறார்.
பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம்
அரசமைப்பு சபை பொலிஸ்மா அதிபரை நீக்கம் செய்த செய்தியை அறிந்ததும் சீனாவில் இருந்தவாறு ஒரு மணித்தியாலத்தில் தொலை பேசியில் கதைத்து அரசமைப்பு சபையின் சுயாதீனத்தை மீறி மீள நியமிக்க ஓடர் போட முடியும்.
அவ்வாறாயின், தமிழ் மக்கள் விவகாரத்தில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களை சிங்கள மக்கள் ஏவி அபகரிக்கும் செயற்பாட்டை ஏன் தடுத்து நிறுத்தவில்லை இதில் வெளிப்படையாக தெரிகிறது ஜனாதிபதியின் இரட்டை வேடம்.
தனது அதிகார கதிரையை பாதுகாக்க தனக்கு சாதகமான பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் முடிந்து நீடிக்கப்பட்டு மேலதிக காலமும் முடிவடைந்த நிலையில் தங்களுக்கு பொருத்தமானவரை நியமிக்கும் வரையும் இருப்பவரை தக்க வைக்க வெளிநாட்டில் இருந்து உடன் நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி, சட்டவிரோதமாக தமிழர் தாயகத்தில் நடைபெறும் செயற்பாடுகளை ஏன் தனது அரச இயந்திரத்திற்கு கீழ் உள்ள கட்டமைப்புக்களை நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தவில்லை.
ஆகவே இத்தகைய நடவடிக்கைகள் ஜனாதிபதி இரட்டை வேடம் போடுகிறார் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.