வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் சிறப்புச் செயலணிக்குள், அந்த மாகாணங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆகக் குறைந்தது மாவட்ட இணைத் தலைவர்களாவது உள்ளீர்க்கப்படவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால், வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் சிறப்புச் செயலணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, எதிர்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாணத்துக்கும், மத்திக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக பல அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுப்பதில் பிரச்சினை இருந்து வருகின்றது. குறிப்பாக வடக்கு மாகாண சபையின் அனுமதியின்றி மத்தி தன்னிச்சையாக அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்ததால், மாகாணசபையின் ஒத்துழைப்பு அத்தகைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு கிடைத்திருக்கவில்லை.இரு தரப்புக்களையும் ஒருங்கிணைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடுகின்றமை வரவேற்கத்தக்க விடயம். மாகாண, மத்தி இழுபறி காரணமாக பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் முடங்காது.
வடக்கு – கிழக்கின் அபிவிருத்தியில் மாகாணத்துக்குப் பொறுப்பான விடயங்களுக்கு மாகாண சபையின் பிரதிநித்துவம் செயலணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மாத்திரம் இந்தச் செயலணிக்குள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் என்பது தெரியவில்லை.
இந்தப் பகுதி மக்களின் அபிவிருத்தித் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பங்கு இருக்கின்றது. அவர்களையும் உள்வாங்கவேண்டும். ஆகக் குறைந்தது மாவட்ட இணைத் தலைவர்களாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது செயலணிக்குள் உள்ளீர்க்கவேண்டும்.
48பேரை செயலணியின் உறுப்பினர்களாக நியமித்திருக்கின்றார்கள். இது மிகப் பெரிய தொகை. இவ்வளவு பேரை வைத்துக் கொண்டு ஒரு விடயத்தைச் செய்து முடிப்பது பெரும் சிரமமான விடயம். இவ்வளவு பேரையும் ஒருங்கிணைப்பதே பெரும் கஷ்டம்.
செயலணி நல்ல நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருக்கின்றது. திறமையான ஒருவர் செயலணியின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைச் சரியான திசையில் நடத்திச் செல்வதற்கு மேற்சொன்ன இரண்டு குறைகளையும் நீக்கினால் நல்லது – என்றார்.