நாட்டில் இருந்து மாலை தீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய அங்கிருந்து இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் மேற்கொண்ட போராட்டத்தையடுத்து நாட்டில் இருந்த வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலை தீவுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் மாலை தீவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கு அங்கு உள்நுழைய அனுமதியளித்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட பயணமாக வந்துள்ள நிலையில், அவர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தஞ்சம் கோரவில்லை. அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவில்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை ஏற்பதில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிங்கப்பூரின் சங்கி விமான நிலையத்தின் வாசலில் ஊடகவியலாளர்கள் பலர் காத்திருக்கின்றனர்.
“ ஜனாதிபதி ராஜபக்ஷ சங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேறியதைக் நாம் காணவில்லை, ஆனால் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையைப் பார்க்கும்போது, அவர் தனிப்பட்ட விருந்தினராக நாட்டிற்குள் நுழைந்தார். இப்போது அவர் எங்கு சென்றார், எவ்வளவு காலம் தங்கி இருப்பார் என்பதை அறிய காத்திருக்கிறோம். என ஒரு ஊடகவியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.