வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கெபிதிகொல்லேவை பிரதேசத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
ஜனாதிபதி முதலில் கெபிதிகொல்லாவ பிரதேச செயலாளர் பிரிவின் கஹடகொல்லேவ பிரதேசத்திற்கு விஜயம்செய்தார். வரட்சியான காலநிலை காரணமாக தாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அப்பிரதேச மக்கள் ஜனாதிபதிக்கு விளக்கியதுடன், அவர்களது முதன்மையான கோரிக்கை தமக்கு குடிநீர் மற்றும் தண்ணீர் தேவையை நிறைவேற்றித் தரவேண்டும் என்பதாகும்.
இச்சந்தர்ப்பத்தில் குறித்த அதிகாரிகளை தொடர்புகொண்ட ஜனாதிபதி, அம் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிக்கொடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை குறைவின்றி வழங்கமாறும் பணிப்புரை விடுத்தார்.
தொடர்ச்சியாக மூன்று போகங்கள் பயிர்ச்செய்யக் கிடைக்காத காரணத்தினால் தாம் முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கினர். வரட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உலர் உணவு கூப்பன்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வரட்சியினால் ஏற்பட்டுள்ள காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், யானைகள் வராத வகையில்
வேலியொன்றை அமைத்துத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கவனம்செலுத்திய ஜனாதிபதி, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கடுமையான வரட்சியின் காரணமாக நீர் வற்றியுள்ள கஹடகொல்லேவ குடாபுலியன்குளம் குளத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார். மக்களுடன் இருந்து அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, அவற்றை துரிதமாக நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததுடன், பிரதேசவாசி ஒருவரினால் வழங்கப்பட்ட பெலிமல் பானத்தையும் சுவைத்து மகிழ்ந்தார்.