ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இன்று புதன்கிழமை (17) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போது காணப்படும் தோட்ட வீடுகள் மற்றும் லயன் அறைகளை ஒன்றிணைத்து கிராமங்களாக மாற்றுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரம் தொடர்பில் இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேஷன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.வேலுகுமார் மற்றும் எம்.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், இன்றைய கலந்துரையாடல் வெற்றிகரமாக இடம்பெற்றது. கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின பெரும்பாலானவர்கள் இந்த திட்டத்துக்கு ஆதரவைத் தெரிவித்த அதே வேளை, சிலர் சில திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் தேவை என்பதையும் வலியுறுத்தினர். தோட்டங்கள், கிராமங்களாக மாற்றப்பட்டால் அது லயன் அறைகளுக்கு அங்கீகாரத்தை வழங்குவதைப் போன்றாகிவிடும் என்று சிலர் குறிப்பிடுக்கின்றனர். ஆனால் அது அவ்வாறில்லை.
புறக்கோட்டையில் சுமார் 7500 பேர் தொழில் புரிகின்றனர். இவர்கள் நினைத்தால் தமது பெற்றோருக்கு வீடொன்றை நிர்மாணித்துக் கொடுக்க முடியும். அவர்களுக்கான மலசலகூடங்களையும் அமைத்துக் கொள்ள முடியும். அதற்கான வசதிகள் அவர்களுக்கு காணப்பட்டாலும், காணி உரிமை இன்மையால் ஒரு செங்கல்லைக் கூட நாட்ட முடியாத நிலைமையில் காணப்படுகின்றனர். எனவே இந்த சந்தர்ப்பத்தில் தமக்கு எது முக்கியம் என்பது மக்களுக்கு தெரியும். வீட்டுரிமை மற்றும் காணியுரிமை என்பவை வௌ;வேறானவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தோட்டங்களை கிராமங்களாக்கினால் மாத்திரமே அந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் தடையின்றி கிடைக்கும் என்றார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் தெரிவிக்கையில், 200 வருட வரலாற்றை கொண்ட 11 மாவட்டங்களில் பரவலாக காணப்படும் மலையக மக்களின் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மலையகத்தினை கிராமமாக மாற்றும் வேலை திட்டம் காலத்திற்க்கு ஏற்ற சரியான தீர்மானமாகும். பெருந்தோட்டங்களை பொருத்தமட்டில் குடியிருப்புகளை விஸ்தரிப்பதற்கும், நீர் மற்றும் மின்சார இணைப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் தோட்ட முகாமையிடம் அனுமதி பெற வேண்டிய நிலைமையே காணப்படுகிறது. இவ்வாறு பெருந்தோட்டங்கள் கம்பனிகளின் கைப்பிடிக்குள் மட்டும் சிக்கித் தவித்தது போதும்.
இந்த திட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டி உள்ளது. ஆகவே எதிர்க்கட்சி ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களையும் உடன் இணைத்து கொண்டு உபக்குழு ஒன்றை அமைத்து நிறை குறைகளை ஆராய்ந்து உடனடியாக இந்த வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். எதிர்வரும் 22ஆம் திகதி இக்குழு அதனுடைய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஜனாதிபதியின் அமைச்சரவை தீர்மானத்திற்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என்றார்.