அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் இறுதி அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்று,வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டதை தொடர்ந்து அதற்கு ஆதரவு வழங்குவதா,இல்லையா என்பது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானிப்போம்.
நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறைமையை செயற்படுத்த வேண்டும் அல்லது பாராளுமன்ற முறைமையை செயற்படுத்த வேண்டும். இவ்விரண்டையும் விடுத்து நடுவில் இருந்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்பது எந்தளவிற்கு சாத்தியமாக அமையும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் தற்போது மக்கள் வாக்கெடுப்பு இடம்பெற்றால் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்களின் நிலைப்பாடு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிரானதாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு என ஒரு வரைபு பாராளுமன்றில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் கொண்டுவருவதாக குறிப்பிடப்படும் அரசியலமைப்பு திருத்தம் இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை. அதற்கு பெயர் கிடையாது.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள வரைபு எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள செயற்படுத்த வேண்டும் என்பது அதில் பிரதானமான இலக்காகும். இருப்பினும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்து செய்வதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். இருப்பினும் அவரது 100 நாள் செயற்திட்டத்தில் மக்கள் வாக்கெடுப்பிற்கு செல்லாத விடயங்கள் மாத்திரம் திருத்தம் செய்யப்படும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இரத்து செய்யப்படும் என குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் எதிர்தரப்பினரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தற்காலிகமாக கொண்டுவரப்பட்டது என்றே அப்போது குறிப்பிடப்பட்டது. 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என குறிப்பிடப்பட்டது.
இருப்பினும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பல தளர்த்தப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டுமாயின் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தற்காலிகமாக ஒன்றை கொண்டு வருவதை விடுத்து நேரடியாக ஒன்றைக்கொண்டு வந்து அதனை நிறைவேற்றுவது அத்தியாவசியமானது என்பது எமது நிலைப்பாடு.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்துவதாக குறிப்பிடப்படும் விவகாரத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை. தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப் பெற்று,வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை தொடர்ந்தே உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம்.
ஒன்று பாராளுமன்ற ஆட்சி முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும், அல்லது ஜனாதிபதி ஆட்சி முறைமையினை நடைமுறைப்படுத்த வேண்டும்.அதனை விடுத்து நடுநிலையில் இருந்துக்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டுமாயின் மாகாண சபை முறைமையையும் தேர்தல் முறைமையையும் இரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடுவது பொருத்தமற்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை தொடர்பில் தற்போது மக்கள் வாக்கெடுப்பு நடத்தினால் நூற்றுக்கு 70 சதவீதமானோர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்ய வேண்டும் என்றே குறிப்பிடுவார்கள் என்றார்.