ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம். அவரது தலைமைத்துவத்தினால் நாடு பாரிய நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது. ஆகவே அவரை நாங்கள் ஒருபோதும் தனிமைப்படுத்தமாட்டோம். ஒன்றிணைந்து செயற்படுவோம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டை பொறுப்பேற்க தற்போது தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாசவிடம் பலமுறை வலியுறுத்தினார்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்றால் தமது அரசியல் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் பின்வாங்கினார்கள் நாடு மிக மோசமான நிலையை எதிர் கொண்டிருந்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றார்.
ஜனாதிபதியின் தலைமைத்துவத்தினால் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டுக்கும், ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம். பொருளாதார பாதிப்பில் இருந்து நாட்டையும்,நாட்டு மக்களையும் பாதுகாத்த ஜனாதிபதியை ஒருபோதும் தனிமைப்படுத்த மாட்டோம். ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.