ஜனாதிபதியை சந்தித்தது கூட்டமைப்பு! கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் குறித்து பேச்சு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி அப்பகுதி மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்கு தான் எதிரானவர் அல்ல என்று ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.
கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் அல்லது மாற்று இடங்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், புதுக்குடியிருப்பு காணிகளை விட்டு இராணுவத்தினர் இன்னும் சில நாட்களில் வெளியேறுவர் என்றும், இராணுவத்தினர் வசமுள்ள கிளிநொச்சி மகாவித்தியாலய காணி விடுவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தச் சந்திப்பின் போது கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.