புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் விசாக பூராணை தினம் பௌத்தர்களின் அதி உன்னத சமய பண்டிகையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விசாக பூராணை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.
புத்த பெருமானின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை வடிவமைத்து ஈருலக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பிள்ளைகளுடன் சேர்ந்து வெசக் காலத்தில் சமயச் சடங்குகளை செய்வதும் பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் பௌத்த பாரம்பரியமாகும்.
கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும், உலகளாவிய கொவிட் தொற்றுநோய் காரணமாக, சுகாதாரத் துறையின் பரிந்துரைகளின் பேரில் கூட்டு சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.
எனினும் மூன்று உன்னத விழாக்களை நினைவுகூர்ந்து தத்தமது வீடுகளில் தங்கியிருந்து சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கு அதனை தடையாக கொள்ளத் தேவையில்லை.
அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையை பரப்பும் புத்த பெருமானின் போதனைகளின் படி, அடுத்த மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமை என்பதுடன், பௌத்தர்களின் இந்த உயர்ந்த பண்பினை உலகிற்கு முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுவதற்கும் இது சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.