முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை பாராளுமன்றம் எடுக்கவில்லை, ஜனாதிபதியே தன்னிச்சையான முறையில் தீர்மானங்களை முன்னெடுத்தார்.
ஜனாதிபதியின் அதிகாரத்தை வரையறைக்குட்படுத்தாமை பாராளுமன்றத்தின் தவறு என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
காலியில் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.பாதுகாப்பு தரப்பினருக்கும்,பொது மக்களுக்குமிடையில் அமைதியற்ற தன்மை காணப்படுகிறது.
நாடு தற்போது பல்துறைகளில் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு பாராளுமன்றம் பொறுப்புக்கூற வேண்டும் என பொது மக்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலான எத்தீர்மானத்தையும் பாராளுமன்றம் எடுக்கவில்லை.
முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை ஜனாதிபதியே தன்னிச்சையான முறையில் எடுத்தார்.
நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை வரையறைக்குட்படுத்தாமை பாராளுமன்றத்தின் தவறு . இத்தவறு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக திருத்திக்கொள்ளப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அரசாங்கம் முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயாராகவுள்ளோம். அரசியல் நெருக்கடிக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள தீர்வினை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.சிறந்த அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.