தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாதுள்ள நிலையில் அதனை இருட்டடிப்புச் செய்து பொருளாதாரப் பிரச்சினையொன்று தான் நாட்டில் தற்போது காணப்படுகின்றது என்பதை மையப்படுத்தியே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை விளக்க உரையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்ற தமிழ்த் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை கடந்த 7ஆம் திகதி ஆரம்பித்து வைத்து உரையாற்றியிருந்தார். அவருடைய நீண்ட உரையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் பதவியேற்ற காலத்திலிருந்து முன்னெடுத்த விடயங்களை மட்டுமே மீள நினைவு படுத்தியிருக்கின்றார். ஆனால் அவர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை.
அதுமட்டுமன்றி, அவர் இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. வெறுமனே நாட்டில் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றது என்பதைதான் வெளிப்படுத்தியுள்ளார்.
பொருளதார நெருக்கடியால் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் முங்கொடுக்கும் நெருக்கடிகள் தொடர்பில் அவர் எவ்விதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் பற்றிய சிந்தனை ஜனாதிபதிக்கு உள்ளதா என்பது கூட தெரியவில்லை.
ஒட்டுமொத்தமாக அவர் அவருடைய கொள்கை விளக்க உரையானது, நாட்டில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் இல்லை. பிரச்சினைகள் இல்லை பொருளாதார ரீதியான மேம்பாடே அவசியமானது என்பதையே அடியொற்றியுள்ளது.
இவ்விதமான உரையானது, தமிழர்களின் விடயங்களை உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் இருட்டடிப்புச் செய்யும் முயற்சியாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நீண்ட கொள்கை விளக்க உரையில் நுட்பமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தினை மேற்கொண்டுள்ளார்.
அவர், நெருக்கடியான சூழலில் இருந்து நாட்டிற்கு தலைமை வகித்தது முதல் தன்னுடைய கடந்தகாலச் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்ப்பதற்கு அக்கிரசானத்தைப் பயன்படுத்தியுள்ளார்
இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக உள்ள தமிழ் மக்கள் பற்றி அவர் வாய்திறக்கவில்லை. இதன்மூலமாக தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய எந்தவிமான எதிர்ப்பார்ப்புக்களையும் வழங்கவில்லை. அதுமட்டுமன்றி, இனப்பிரச்சினை தீர்வு உட்பட அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் மௌனம் காக்கின்றார்.
மேலும், விவசாய உற்பதிகளை அதிகரிப்பதற்காக அதிகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய சூழலில் உலர்வலயங்கள் தான் விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமானவையாக உள்ளதென்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் அங்குள்ள நிலங்கள், அதிகமான சேதனைப்பசளையை பயன்படுத்துவதால் பல்வேறு விதமான பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. விசேடமாக சிறுநீரகத் தாக்கம், உயர் குருதி அமுக்கம் உள்ளிட்ட நோய்களுக்கு விவசாயிகள் முகங்கொடுத்துள்ளனர்.
ஆகவே, பாதிக்கப்பட்ட உலர் வலய விவசாயிகள் தொடர்பில் கவனம் செலுத்தாது பொருளாதாரத்தினை மட்டும் கவனத்தில் கொண்டு அதியுச்சமாக சேதனைப்பசளை பயன்பாட்டை முன்னெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார முன்னேற்றத்துக்காக அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மாறாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்படுவதற்கு ஒன்றிணையுமாறு அழைக்கப்படவில்லை.
அவர்,இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாது எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற எமது தொடர்ச்சியான வலியுறுத்தலை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
ஏனென்றால், கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாது இருந்தமையால் தான் போர் நடைபெற்றது. அதனால் பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்பட்டன என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியமாகின்றது.
மேலும் உள்நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வொன்றைக் காணாது நாட்டின் பொருளாதார ரீதியான அபிவிருத்தி, சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குதல் என்பது மிகக்கடினமாதொன்றும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. இதனால் நடைபெற்ற போருக்காக அரசாங்கம் 200பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்துள்ளதாக இந்திய ஆய்வறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது.
அதேநேரம், போரின் பின்னரான நிலைமைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக போர்க்காலத்தைப் போன்றதொரு செலவீனம் செய்யப்பட்டிருக்காலம் என்பதும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாமையால் போரின் போதும், அதன் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட செலவீனம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயத்தினை ஜனாதிபதி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குறித்த விடயத்தினை புரிந்து கொண்டே அவர் தனதுகொள்கை விளக்கத்தினை வெளிப்படுத்த வேண்டும்.
அதனைவிடுத்து, வெறுமனே தனது பிரசாரத்துக்கான ஆயுதமாக கொள்கை விளக்கத்தினைச் செய்வதால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதேபோன்று முதலீடுகளைச் செய்யுமாறு புலம்பெயர் தமிழர்களை அழைக்கின்றார். ஆனால் அவர்களுக்கான எந்தவொரு உறுதிப்பாடுகளும் அற்ற நிலைமைகளே உள்ளன.
புலம்பெயர் தமிழர்களில் பலர் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வளிக்க வேண்டும் என்றே கோருகின்றார்கள். ஆனால் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச்சட்டத்தினையே முழுமையாக அமுலாக்குவதற்கு தயாரில்லாத நிலையில் எவ்வாறு அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் அவரால் உறுதிப்பாடுகளை வழங்க முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன.
அத்துடன், அந்த விடயங்கள் சம்பந்தமாக எந்தக்கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கு தயாரில்லாதவரின் அழைப்பினை எவ்வாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், புலம்பெயர் முதலீட்டாளர்களும் ஏற்றுக்கொள்வது என்றார்.